காதல்ஜோடியை பிரிக்க முயன்றதால் பரபரப்பு

விழுப்புரம், நவ. 14: விழுப்புரம் எஸ்பி அலுவலக வளாகத்தில், விசாரணைக்கு அழைத்து சென்ற காதல் ஜோடியை அனுப்பாமல் பெற்றோர்கள், உறவினர்கள் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அருகே வி.அகரம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் விமல்(23) இவர், புதுச்சேரி மாநிலம் கரியமாணிக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். இதே நிறுவனத்தில், சேலம் அருகே சின்னசீரகாம்பாடி பகுதியை சேர்ந்த சம்பு மகள் கிருத்திகா(21) என்பவர் பணியாற்றிய போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கடந்த இரு ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.கிருத்திகா வீட்டில், காதல் விவகாரம் தெரியவந்ததையொட்டி, பெற்றோர் மறுத்ததால், அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, விமலின் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, இருவரும், கடந்த 11ம் தேதி, வளவனுாரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், சேலம் அருகே ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில், கிருத்திகாவின் பெற்றோர் தங்கள் மகளை விமல் கடத்தி சென்றதாக புகார் அளித்துள்ளனர்.

திருமணம் முடிந்த நிலையில், விமல் வீட்டில் இருவரும் இருந்தனர். இதையறிந்த பெண்ணின் உறவினர் சிலர் மற்றும் ஆட்டையாம்பட்டி போலீசார் உதவியோடு நேற்று கார் மூலம், விமலின் வீட்டிற்கு வந்தனர். அங்கு, விமல், கிருத்திகா இருவரையும், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர். ஆனால் கிருத்திகா, கணவரோடு செல்வதாக கூறியவுடன், இருவரையும் வி.அகரத்திற்கு அனுப்பி விடுவதாக, விமலின் பெற்றோரிடம், போலீசார் தெரிவித்துள்ளனர்.இதை நம்பி பெற்றோர் அனுப்பிய நிலையில், காருக்கு அருகே சென்ற போது, ஆட்டையாம்பட்டி போலீசார் விமலை கழுத்தில் தாக்கி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த காரில், சேலம் போலீசாரோடு, வளவனுார் போலீசார் இருவரும் சென்றனர். இதையடுத்து, விமலின் உறவினர்கள் பலரும், அந்த காரை பின் தொடர்ந்து, மற்றொரு காரில் வந்ததால் பதற்றமடைந்த, ஆட்டையாம்பட்டி போலீஸ்காரர்கள் சென்ற கார், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்திற்குள் சென்றது.

அங்கு வந்த, பெற்றோர் மற்றும் உறவினர்கள், விமல் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை விட்டு, விட்டு செல்ல வேண்டுமென, போலீசாரிடம் தகராறு செய்தனர். கிருத்திகாவும், சேலத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்து காரிலேயே அழுது கொண்டிருந்தார்.பின், ஏ.டி.எஸ்.பி., சரவணக்குமார், விமல், கிருத்திகாவை சமாதானம் செய்து, உண்மை தன்மையை விசாரித்து, இருவரிடம் எழுதி வாங்கி கொண்டு, அதை ஆட்டையாம்பட்டி போலீசாரிடம் கொடுத்து அனுப்பினார். பின், விமல், கிருத்திகா ஆகியோர், அங்கிருந்து புறப்பட்டு தங்களின் வீட்டிற்கு சென்றனர். இந்த சம்பவத்தால், விழுப்புரம் எஸ்பி அலுவலக வளாகத்தில் நேற்று பெரும்பரபரப்பு ஏற்பட்டது

Related Stories: