சுகாதாரத்துறை இயக்குனர் ஆபீசை மார்க்சிஸ்ட் கம்யூ. திடீர் முற்றுகை

புதுச்சேரி,  நவ. 14:   அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து தட்டுப்பாடு  உள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் துறை இயக்குனரிடம்  முறையிட நேற்று சட்டசபை அருகிலுள்ள மாநில சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம்  சென்றனர். அங்கு அதிகாரி இல்லாததால் முற்றுகையில் ஈடுபட்டனர்.   போராட்டத்துக்கு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். நகர செயலாளர்  மதிவாணன், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருந்து தட்டுப்பாடு கண்டித்து  கோரிக்கை ஏந்திய பதாகைகளுடன் கோஷமிட்டனர். தகவலின்பேரில் பெரியகடை எஸ்ஐ  முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சமாதானம் செய்தனர்.  இயக்குனர் காரைக்காலில் இருப்பதாக தகவல் தெரிவித்ததால் அங்கிருந்து  பேரணியாக அரசு பொது மருத்துவமனைக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் மருத்துவமனை கண்காணிப்பாளரை சந்திக்க முயன்றனர். அதற்கு  போலீசார் அனுமதி மறுத்த நிலையில் அங்கு மார்க்சிஸ்ட் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபடவே சலசலப்பு ஏற்பட்டது.

 பின்னர் அரசு மருத்துவமனை  உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரவி, அங்குவந்து போராட்டக் குழுவுடன்  பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரிடம் மற்ற மருத்துவமனை குறைபாடுகளை  எடுத்துக் கூற முடியாது என்பதால் மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு  அதிகாரி) வரவேண்டுமென அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து  அங்கு வந்த மருத்துவமனை அதிகாரி வாசுதேவனிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தற்போதைய குறைபாடுகளை சுட்டிக் காட்டினர்.   இதையடுத்து இன்று சுகாதாரத்துறை இயக்குனரை சந்திக்க முடிவு செய்துள்ள  மார்க்சிஸ்ட் கட்சியினர், அவரிடம் நடத்தும் பேச்சுவார்த்தைக்கு பிறகு  அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Related Stories: