வேலூர் சுகாதார மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம்: மாநில இணை இயக்குனர் பங்கேறப்பு

வேலூர், நவ.14: வேலூர் சுகாதார மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டத்தில் மாநில இணை இயக்குனர் கலந்து கொண்டார். வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.இதுவரை 5 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் மட்டும் 480 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த மாதம் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 142 பேர் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் சுகாதார மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொறுப்பு மருத்துவ அலுவலர், மாநகராட்சி, நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள துணை சுகாதார அலுவலத்தில் நேற்று முன்தினம் நடந்தது.கூட்டத்திற்கு, பூச்சிகளால் ஏற்படும் நோய்கள் தடுப்பு பிரிவு மாநில இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், வேலூர் சுகாதார மாவட்டத்தில் தினமும் காய்ச்சல் பாதிக்கும் பகுதி, டெங்கு காய்ச்சல் பாதிக்கும் பகுதி, 5 நாட்கள் தொடர் காய்ச்சல் உள்ள பகுதிகளில் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளின் வரைப்படம் வரைந்து, அந்த பகுதிகளில் 100 பணியாளர்கள் அனுப்பி வைத்து கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனை வழங்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: