நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

பழநி, நவ.14: பழநி அருகே பொட்டம்பட்டியில் நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வலுக்கட்டயமாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழநி அருகே கணக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்டது பொட்டம்பட்டி கிராமம். இங்குள்ள நிலத்தை விலைக்கு வாங்கிய ஆதிதிராவிடர் நலத்துறை, அதனை 120 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி உள்ளது. எஞ்சிய உள்ள நிலத்தில் 17 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. தகுதியானவர்கள் இல்லையெனக் கூறி நீதிமன்றம் 9 பேரின் பட்டாவை ரத்து செய்தது. எஞ்சிய 8 பேருக்கு நிலத்தை அளந்து கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவின்படி நிலத்தை அளந்து கொடுக்கச் சென்ற வருவாய்த்துறையினர் மற்றும் நில அளவைப் பிரிவினரை அப்பகுதியில் முன்பு கொடுக்கப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டா இடத்தில் வசிப்பவர்கள் அளக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இவர்களுடன் சப்.கலெக்டர் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நீதிமன்ற உத்தரவு என்பதால் 8 பேருக்கு அளந்து கொடுத்துதான் ஆக வேண்டும். ஆட்சேபம் இருந்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று தாசில்தார் பழனிச்சாமி தலைமையில் வருவாய்த்துறையினர் நிலத்தை 8 பேருக்கு அளந்து கொடுக்கச் சென்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சில பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொள்ள முயன்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை வலுகட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று அப்புறப்படுத்தினர். போராட்டக்காரர்கள் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேன்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றவர்கள் காவல்நிலையத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டனர். இதன்பின்பு சம்மந்தப்பட்ட 8 பேருக்கு நிலம் அளந்து கொடுக்கப்பட்டது.

Related Stories: