பல லட்சம் ரூபாய் ‘ஏப்பம்’ என புகார் சிறு விவசாயிகள் வணிக கூட்டமைப்பில் முறைகேடு?

பழநி, நவ.14: சிறு விவசாயிகள் வணிக கூட்டமைப்பில் நடைபெற்று வரும் பல லட்ச ரூபாய் முறைகேடுகளை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி, ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி பகுதிகளில் மக்காச்சோளம் மற்றும் சோள வகைகள் அதிகளவு பயிரிடப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் சிறு விவசாயிகளின் வேளாண் வணிக கூட்டமைப்பு மூலம் மதுரை தான் அகாடமியின் களஞ்சியம் தொழிலகம் பழநி, ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த மக்காச்சோளம் மற்றும் சோள விவசாயிகளை 1000 பேரை ஒன்றிணைத்தது. இவர்களில் தலா 20 பேரை பிரித்து ஒரு குழுவாக மாற்றி வேளாண் வணிகத்தில் ஈடுபட வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக குழுவில் உள்ள ஒவ்வொரு விவசாய உறுப்பினரும் ரூ.1000 பங்குத்தொகையாக செலுத்தினர். அதுபோல் விவசாய உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அரசும் ரூ.1000 பங்குத்தொகையாக செலுத்தியது. இத்தொகையை முதலீடாகக் கொண்டு அக்குழுவினருக்கு வேளாண் வணிகத்தில் ஈடுபட பயிற்சி அளிக்கப்பட்டது.

பழநி அருகே டிகேஎன் புதூரில் இத்திட்டத்தின் கீழ் தாமரை உற்பத்தியாளர் குழு, திருவள்ளுவர் உற்பத்தியாளர் குழு, விவேகானந்தர் உற்பத்தியாளர் குழு, ஆண்டாள் உற்பத்தியாளர் குழு, ஸ்ரீராஜகாளியம்மன் உற்பத்தியாளர் குழு, அகத்தியர் உற்பத்தியாளர் குழு ஆகியவை ஏற்படுத்தப்பட்டது. குழுவிற்கு 20 பேர் வீதம் 120 விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், குழுவில் இணைந்த விவசாயிகளுக்கு எந்த பலனும், எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கூறி குழுக்களை கலைத்துள்ளனர். இதுகுறித்து தாமரை உற்பத்தியாளர் குழுவின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், 2015ல் இருந்து குழுவின் தலைவராக இருந்து வருகின்றேன். தலைமை நிறுவனத்தில் இருந்து தெரிவிக்கப்பட்ட எந்த பலனும் உறுப்பினர்களுக்கு கிடைக்கவில்லை. எங்கள் ஊரில் 6 குழுக்கள் இருந்தன. எங்களது பங்குத்தொகையை பெற்றுக்கொண்டு விலகி விட்டோம். கடந்த 2015ல் இருந்து ஒருமுறை கூட உற்பத்தியாளர் கிளைக்குழு கூட்டம் நடைபெற்றதில்லை. மானிய உரங்களை போலி பில்கள் மூலம் முறைகேடு செய்து விட்டனர்.

விவசாயிகளிடம் மக்காச்சோளங்களை வாங்குவதில்லை. நிர்வாகிகள் சிலர் குழுவின் நிதியை எடுத்து மைக்ரோ பைனான்ஸ்  நடத்துகின்றனர். உழவர்சந்தையில் காய்கறி கடை அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளது. விவசாயிகள் இல்லாதோர் பல குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மதுரை களஞ்சியம் தொழிலக அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

Related Stories: