தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் மருந்தகத்திற்கு கூடுதலாக கால்நடை மருத்துவர் நியமிக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

தண்டராம்பட்டு, நவ.14:  தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் கால்நடை மருந்தகத்திற்கு, கூடுதலாக கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் கிராமத்தில் கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் 33 குக்கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி, பூனை போன்ற பிராணிகளுக்கு நோய் பாதிப்பு இருந்தால் இங்கு அழைத்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதன்படி, நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பிராணிகள் இந்த மருந்தகத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகிறது.

இந்நிலையில், மோத்தக்கல் மருந்தகத்தில் பணிபுரியும் உதவி கால்நடை மருத்துவர் முத்துசாமி, கூடுதலாக தானிப்பாடி கால்நடை மருத்துவமனையும் கவனித்து வருகிறார். எனவே, அவர் ஒருநாள் விட்டு ஒருநாள் தான் மோத்தக்கல்லுக்கு வருகிறார். இதனால், மருத்துவர் பணியில் இருப்பார் என்ற எண்ணத்தில் கால்நடைகளை அழைத்து வரும் கிராம மக்கள் பல நாட்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. எனவே, மோத்தக்கல் கால்நடை மருந்தகத்திற்கு கூடுதலாக கால்நடை மருத்துவரை நியமிக்க வேண்டும், போதிய அளவு மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும், மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: