தேனி காந்தி நகர் மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

தேனி, நவ. 14: தேனி காந்திநகர் பகுதி மக்கள் 25 ஆண்டுகளாக ரோடு சீரமைக்கவில்லை என்றும், கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். தேனி காந்திநகர் பகுதியில் முதல் ஐந்து தெரு மக்கள் தங்கள் தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றி வைத்து போராட்டம் நடத்தினர். இது குறித்து இப்பகுதியை சேர்ந்த தனலட்சுமி கூறியதாவது: எங்கள் பகுதியில் ரோடு அமைத்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. மழை பெய்தால் கழிவுநீரும், மழைநீரும் வீடுகளுக்குள் வந்து விடுகிறது. குடியிருப்பு ரோட்டை மெயின் ரோட்டுடன் இணைக்கும் பகுதிகளில் பாலங்கள் கட்டப்படவில்லை. கழிப்பிட வசதிகளும் இல்லை. எங்கள் குடியிருப்பிற்கு ஒரு புறம் சுடுகாடும், மறுபுறம் திறந்த வெளிக்கழிப்பிடமும் உள்ளது. இதனால் துர்நாற்றம் எப்போதும் எங்கள் பகுதியை சூழ்ந்துள்ளது.

மின்கம்பங்களில் தெருவிளக்குகள் இல்லை. இரவு ஏழு மணிக்கு மேல் பெண்கள் மெயின் ரோட்டில் கூட நடமாட முடியவில்லை. எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால் குடிமகன்களின் தொல்லை தாங்க முடியவில்லை. குடிநீர் விநியோகம் கூட முறையாக இல்லை. நகரத்தின் மையப்பகுதியில் வசித்தாலும், ஏதோ வனத்திற்குள் வாழ்வது போல் எங்கள் வாழ்க்கை முறை உள்ளது. இதனை சரி செய்யாவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என கூறினார். ஆதித்தமிழர் பேரவை கிழக்கு மாவட்ட செயலாளர் சிவா கூறியதாவது: ஆதித்தமிழர் பேரவை சார்பில் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் மனு கொடுத்துள்ளோம். இந்திய மாணவர் சங்கத்தினரும் இந்த கோரிக்கையினை வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர். ஆனால், எங்கள் மனுக்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் கோரிக்கையினை வலியுறுத்தி, கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் தொடங்கி உள்ளோம்.

நாங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் எல்லாம் மிகவும் குறைந்த செலவில் தீர்த்து வைக்கக்கூடிய பிரச்னைகள். இதனைக்கூட நகராட்சி செய்ய மறுக்கிறது. பாதாளச் சாக்கடைக்கு பணம் கட்டி பல மாதங்களாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. காந்திநகரின் ஐந்து தெருக்களிலும் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு கொசுத்தொல்லை உள்ளது. எங்கள் கோரிக்கையினை நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க நாங்கள் ஒட்டுமொத்தமாக முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

Related Stories: