சுருளி அருவி சாலையில் ஆபத்தான பள்ளம்

கம்பம், நவ.14: கம்பத்திலிருந்து சுருளி அருவிக்கு செல்லும் சாலையில் பள்ளம் மூடப்படாமல் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கம்பத்திலிருந்து சுருளிப்பட்டி வழியாக சுருளி அருவி சென்று வருகின்றனர்.ஓரிரு நாட்களில் ஐயப்பன் கோயில் சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில் கம்பத்திலிருந்து சுருளி செல்லும் ரோட்டில் பள்ளம் சரியாக மூடப்படாமல் அரைகுறையாக மூடப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பள்ளத்தை நெடுஞ்சாலை துறையினர் கண்டும், காணாமல் உள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்தால் உயிர்ப்பலி தவிர்க்கப்படும் என்று வாகன ஓட்டிகள் கூறினர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், பல மாதங்களாக இந்த பள்ளம் சரியாக மூடப்படாமல் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கும் போது ஏராளமான .பக்தர்கள் சுருளி அருவிக்கு நீராட வருவார்கள். அவர்கள் கவனக்குறைவாக இந்த பள்ளத்தில் வாகனத்தை இயக்கும் போது வண்டி தலைகுப்புற கவிழ்ந்து உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Related Stories: