பெரியகுளத்தில் 20 நாட்களாக குடிநீர் இல்லாமல் இயங்கும் அரசு விடுதி

தேனி, நவ. 14: பெரியகுளம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் 20 நாட்களாக குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்கள் சாப்பாட்டு தட்டுக்களைக் கழுவ தெருக்குழாய் தேடி செல்லும் அவலம் உள்ளது. பெரியகுளம் நகரில் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி சோத்துப்பாறை செல்லும் சாலையில் புதிய மைதானம் அருகே உள்ளது. இவ்விடுதியில் சுமார் 30 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். மாணவர் விடுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் இல்லை. ஆழ்துளை கிணற்றிற்கான மோட்டார் பம்பும் பழுதாகிவிட்டது. இதனால் குடிநீருக்கு இவ்விடுதி மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். காலையில் எழுந்து காலைக்கடன் கழிக்கவும், குளிக்கவும், சாப்பிட்ட பின்னர் தட்டுக்களை கழுவவும் தண்ணீர் இல்லை. தற்போது தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவருகிறது. பெரியகுளம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியின் பின்புறம் வராக ஆறு உள்ளது. இந்த ஆற்றில் கடந்த 10 நாட்களாக அதிக அளவில் தண்ணீர் ஓடுகிறது.

மாணவர் விடுதியில் தண்ணீர் இல்லாததால் மாணவர்கள் காலைக்கடன் கழிக்கவும், குளிக்கவும் வராக ஆற்றிற்கு செல்கின்றனர். ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வரும்போது குளிக்க செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் ஆபத்தும் உள்ளது. மேலும் மாணவர்கள் சாப்பிட்ட பின் சாப்பிட்ட தட்டுக்களை கழுவ தண்ணீர் தேடி புதிய மைதான நுழைவு வாயில் அருகே உள்ள தெருக்குழாய்க்கு சென்று பொதுமக்களுடன் வரிசையில் நின்று தட்டுக்களை கழுவவேண்டிய அவலம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளையும் ஆய்வு செய்து, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தரநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: