அரசு பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரி, நவ.14: கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம், நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், மாநில பொது செயலாளர் சந்திரமோகன் தலைமையில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடத்த வேண்டும். கிராமப்புற பள்ளிகளில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து மூட வேண்டும். தரமான சத்துணவை வழங்க வேண்டும். பழைய பொருட்களை கொண்டே மாணவர்கள் புராஜக்ட் செய்ய, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சில ஆசிரியர்கள், மாணவிகளை அடிப்பதும், திட்டுவதும் தொடர்கதையாக உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், மாவட்ட சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க தலைவர் மோகன், கோபிநாத், மகளிரணி தலைவி ஜூலியஸ், மாவட்ட தொழிற்சங்க தலைவர் சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: