குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய கோரி தண்ணீர் லாரியை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல்

தர்மபுரி, நவ.14: தர்மபுரி அருகே ஏஎஸ்டிசி நகரில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய கோரி, தண்ணீர் லாரியை சிறைபிடித்து பெண்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி  நகராட்சி 10வது வார்டில் ஏஎஸ்டிசி நகர் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி மூலம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனமழை பெய்த போது, தர்மபுரி பிடமனேரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. உபரிநீர் செல்லும் கால்வாய்கள் சிறிதாக இருந்ததால் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த கால்வாய்களை அகலப்படுத்தும் பணி பொக்லைன் மூலம் நடந்தது. அப்போது அப்பகுதியில் இருந்த ஏஎஸ்டிசி நகர் பகுதிக்கு விநியோகம் செய்யப்படும், பிரதான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்தது.  

இதையடுத்து அந்த குழாய் சரிசெய்யப்படவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் ஏஎஸ்டிசி நகரை சேர்ந்த மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து வாரம் ஒரு முறை நகராட்சி மூலம் சுமார் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட  லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் குடிநீர் லாரி ஏஎஸ்டிசி நகருக்கு வந்தது. அப்போது லாரியை காலி குடங்களுடன் சிறைபிடித்த  அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஏஎஸ்டிசி நகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் சுகுமார், நகராட்சி ஆணையர்(பொ) கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் குழாய் உடைப்பை விரைவில் சரிசெய்து கொடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்துசென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குடிநீர் குழாய் உடைப்பினால், கடந்த 2மாதமாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து நகராட்சிக்கும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாரத்தில் ஒருநாள் நகராட்சி லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்கின்றனர்.இந்த தண்ணீர் ேபாதுமானதாக இல்லை. கூடுலாக தண்ணீர் கேட்டாலும் கொடுப்பதில்லை. இதனால் ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் செய்ய கோரி மறியலில் ஈடுபட்டோம் என்றனர்.

Related Stories: