சேந்தமங்கலம், நவ.14: கொல்லிமலையில் தொடர் மழை பெய்த போதிலும், நீர்வழித்தட ஆக்கிரமிப்பால் சேந்தமங்கலம் அடுத்த பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் ஐந்துநாடு, பயில்நாடு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர், காரவள்ளி பெரியாற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் வெண்டாங்கி வழியாக துத்திக்குளம், சின்னகுளத்திற்கு செல்கிறது. அந்த குளம் நிரம்பிய பிறகு உபரிநீர் பொம்மசமுத்திரம் ஏரிக்கு வருகிறது.