பாவூர்சத்திரம் அருகே உருக்குலைந்த சாலையால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

பாவூர்சத்திரம், நவ. 14: பாவூர்சத்திரம் அருகே உருக்குலைந்த தார் சாலையால் வாகன ஓட்டிகள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கீழப்பாவூர் ஒன்றியம் குலசேகரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாவூர்சத்திரம் பஸ் நிலையம் வடபகுதி நடராஜனார் சாலை வழியாக குறும்பலாப்பேரி  சின்னதம்பி கோயில், சமுத்திரபுரம், உலகாசிபுரம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக மேலப்பாவூர் செல்லும் சாலை சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.  இந்த சாலை பாவூர்சத்திரத்திலிருந்து மேலப்பாவூர் செல்வதற்கு குறுக்கு சாலையாக இருப்பதால் பெரும்பாலோனோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாகன  ஓட்டிகளுக்கு நேரமும், எரிபொருள் செலவும் மிச்சமாகிறது. மேலும் இந்த சாலையின் இரு புறமும் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன.  எனவே விவசாயிகளும் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.  பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும், அரசு பள்ளிக்கு செல்லும் ஆசிரியர், ஆசிரியைகளும்  இந்த சாலையில் தினமும் பயணித்து வருகின்றனர்.

இச்சாலை கடந்த 8 வருடங்களுக்கு முன்பு நபார்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.15 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளதுடன் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள்  கீழே விழுந்து காயம் ஏற்படும் அபாயம் நிலை உள்ளது. இச்சாலையில் விவசாய பொருட்களை கொண்டு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இச்சாலை முழுவதும் பெரிய, பெரிய குழிகளாக காட்சியளிக்கின்றன.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சிதிலமடைந்து கிடக்கும் பாவூர்சத்திரம் - மேலப்பாவூர் குறுக்குச்சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: