அந்தியூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து விவசாயிகள் சாலை மறியல்

அந்தியூர், நவ.14: அந்தியூர் அருகே ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் அரசு பஸ்சை சிறைபிடித்து நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கெட்டிசமுத்திரம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்தியாபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரி என ஆறு ஏரிகள் உள்ளன. வனப்பகுதியில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி அதன் உபரி நீர் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியும் நிரம்பி அந்தியூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் இந்த ஏரியில் 6 அடி மட்டத்திற்கு தண்ணீர் உயர்ந்தது. இந்நிலையில், இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் சந்திபாளையம் ஏரிக்கும், அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் வேம்பத்தி ஏரிக்கும் வந்து சேரும்.

இதற்கிடையே, வேம்பத்தி ஏரிக்கு நீர் வரும் வழிப்பாதை காட்டூர் என்ற பகுதியில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறி கோரி, அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேம்பத்தி சொக்கநாச்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக ஆப்பக்கூடலில் இருந்து அந்தியூர் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்தனர். இதனால், அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூர் மற்றும் ஆப்பக்கூடல் போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசு பஸ்சை விடுவித்தனர். மேலும், இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து, விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: