ஒற்றை யானையை பிடிக்க வனத்தில் மயக்க ஊசி, துப்பாக்கியுடன் தீவிர தேடுதல் வேட்டை

பொள்ளாச்சி, நவ.14: கோைவ மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அர்த்தநாரிபாளையம் பகுதியில் உள்ள தோட்டங்களில்,  அடர்ந்த வனத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஒற்றை காட்டுயானை புகுந்து  அட்டகாசம் செய்தது. அங்கு பல தென்னை மற்றும் வாழைகளை நாசப்படுத்தியதுடன், குடிசை வீடுகளை  இடித்து சூரையாடியது. சேத்துமடை மற்றும் நவமலை,  அர்த்தனாரிபாளையம் உள்ளிட்ட இடங்களில் 4 பேரை தாக்கி கொன்றது. 2017ம்  ஆண்டு கோவை அருகே வெள்ளலூர் பகுதியில் 4 பேரை  தாக்கி கொன்றுள்ளது. இந்த யானையால்  இன்னும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள்  மட்டுமின்றி, வனத்துறையினரும் அதிர்ச்சியில் உள்ளனர். எனவே அட்டகாச யானையை  பிடிக்க கடந்த சில நாட்களாக அர்த்தனாரிபாளையம் பகுதியில் 24 மணி நேரமும் வனத்துறையினர்  முகாமிட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நேற்று  முன்தினம் காலையில் வனத்துறையினரை கண்டு, அந்த யானை வனத்திற்குள் சென்றது.

யானையை கும்கிகள் உதவியுடன் பிடிக்க  வனத்துறையினர் மேற்கொண்டு வந்தனர். டாப்சிலிப் முகாமிலிருந்து கலீம்  என்ற கும்கி யானையை வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்துக்கு அழைத்து  சென்றுள்ளனர். மற்றொரு கும்கி யானை பாரிக்கு மதம் பிடித்ததால், அதனை  கோழிக்கமுத்து முகாமிற்கு விட்டுவிட்டு, அங்கிருந்து கபில்தேவ் என்ற  கும்கி யானை வரவழைக்கப்பட்டது. அரிசி ராஜா என்ற அடைமொழி  பெயரிடப்பட்டுள்ள அட்டகாச யானையை எப்படியாவது பிடித்து வரகளியாறு முகாம்  மரக்கூண்டில் அடைத்து வைக்க தீவிர முயற்சியில் வனத்துறையினர்  ஈடுபட்டுள்ளனர். இதற்காக, வனத்துறையில் நன்கு பயிற்சிபெற்ற 4 பேர் மயக்க  ஊசியுடன் கூடிய துப்பாக்கியுடன் வெவ்வேறு இடங்களில் நின்று கண்காணித்து  வருகின்றனர்.

100 மீட்டருக்கு அப்பால் யானை நின்றாலும், துப்பாக்கி  மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நேற்று  காலையில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, வனச்சரகர்  காசிலிங்கம் தலைமையில் 10 பேர் கொண்ட 4 குழுவாக தனித்தனியாக  பிரிந்து, வனத்தில் ரோந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.ஒற்றை யானை, அர்த்தனாரிபாளையம் அருகே, சூரிபள்ளம் என்ற இடத்தில்  நிற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, யானையை சுற்றி வளைத்து  மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.  ஆனால், யானை வனத்துறையினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு  அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றது. இதனால் வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும், யானையை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: