தமிழகத்தில் 6 இடங்களில் ஆராய்ச்சி கரும்புக்கு மாற்றாக ‘சுகர் பீட்’

கோவை, நவ. 14: தமிழகத்தில் கரும்புக்கு மாற்றாக சர்க்கரை பீட்ரூட் (சுகர்பீட்) என்ற புதிய ரகம் 6 இடங்களில் ஆராய்ச்சிக்காக பயிரிட உள்ளதாக வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புது டெல்லி மானவாரி பகுதி ஆணையம் மற்றும் குருகிராம் குளோபல் அக்ரிசிஸ்டம் நிறுவனம் சார்பில் கரும்புக்கான மாற்று பயிர் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் சுப்பிரமணியம் வரவேற்றார். குருகிராம் குளோபல் அக்ரிசிஸ்டம் நிறுவன தலைவர் கோகுல், புனே வசந்த்டாடா சர்க்கரை நிறுவன பொது இயக்குனர் சிவாஜிராவ் தேஷ்முக், பெல்ஜியம் சீஸ்வெண்டர்ஹவ் நிறுவன தகவல் தொடர்பு தலைவர் ஜான் நோயல், வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் குமார், வேளாண் விஞ்ஞானிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், கரும்பிற்கான மாற்று பயிராக சர்க்கரை பீட்ரூட் (சுகர்பீட்) கிழங்கு பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இது குறித்து வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் கரும்பு பயிரிடுவதில் பிரச்னை உள்ளது. பத்து மாத பயிரான கரும்பிற்கு தண்ணீர் அதிகம் தேவை. இதனால், கரும்பு விவசாயம் குறைந்து விட்டது. எனவே, கரும்புக்கு மாற்றாக பெல்ஜியம் நிறுவனத்தின் சுகர் பீட் என்ற புதிய ரக பயிரை சோதனை முறையில் பயிரிடப்படவுள்ளது.  இதனை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையமான கோவை, கடலூர், சிறுகமணி, வைகை டேம், மேலாலத்தூர் மற்றும் மதுரை என 6 இடங்களில் வரும் டிசம்பர் மாதம் பயிரிடப்படும். இது 150 நாள் பயிர். கரும்பை விட மூன்றில் ஒரு பங்குதான் தண்ணீர் தேவைப்படும். ஒரு எக்டருக்கு 60 முதல் 70 டன் வரை உற்பத்தி கிடைக்கும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிரிட்டுள்ளனர். இதற்கான விதையை பெல்ஜியம் நிறுவனம் அளிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் கரும்புக்கு மாற்று பயிராக பயிரிட முடியும். தமிழக காலநிலைக்கு பயிரின் உற்பத்தி, தரம் உள்ளிட்டவை குறித்து கண்டறிய இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆராய்ச்சி முடிவுகளுக்கு பிறகு விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். தவிர, மாற்று பயிராக சர்க்கரை சோளம் மற்றும் மூங்கில் பயிர்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: