பர்கூர் இன மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

ஈரோடு, நவ.14:பர்கூர் இன மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் வகையில் மலைக்கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் பர்கூர் இன மாடுகள் வளர்க்கப்படுகின்றன. உழவு மற்றும் பாரம் இழுத்தல் பணிகளுக்கு பெயர் பெற்ற இம்மாடுகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகின்றது. இந் நிலையில், மலைப்பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோமாரி நோய் தாக்கும் அபாயம் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சமவெளிப்பகுதிகளில் உள்ள கிராமங்களைபோல மலைக்கிராமங்களிலும் கோமாரி நோய் தடுப்பூசி போட சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை, பட்டேபாளையம், ஒசூர், கோயில்நத்தம், செங்குளம், கொங்காடை, மடம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கிள்ல 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எருமை, பசு மாடுகள் உள்ளன. மலைவாழ் விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள இந்த கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படாமல் உள்ளது. தற்போது, தொடர் மழை பெய்து வருவதால் மண்ணின் தன்மை ஈரத்துடன் இருப்பதால் எளிதில் கோமாரி நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சமவெளிப்பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் துவங்கி நடந்து வருகிறது. ஆனால், மலைக்கிராமங்களில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.எனவே, கால்நடைத்துறையினர் உரிய கவனம் செலுத்தி சிறப்பு முகாம்கள் நடத்தி மாடுகளுக்கு தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: