குமரியில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மருத்துவ காப்பீடு திட்ட நிதியை பெறுவதில் தாமதம் கலெக்டர் அலுவலகத்தில் மாதக்கணக்கில் விண்ணப்பங்கள் தேக்கம்

நாகர்கோவில், நவ.14:  குமரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட இன்சூரன்சு நிறுவனத்தில் இருந்து மருத்துவ காப்பீடு திட்ட நிதியை பெறுவதற்கான விண்ணப்பம் அளித்து, பல மாதங்கள் ஆகியும் தேக்கம் அடைந்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இதற்காக அவரவர் சம்பளம், ஓய்வூதியத்தில் இருந்து, குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.  காப்பீடு திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் தங்களது அவசர தேவைக்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற பின், அதற்கான மருத்துவ செலவு தொகையை கேட்டு கருவூலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதற்காக மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் தலைமையில் குழு உள்ளது. இந்த குழு இதை பரிசீலனை செய்து, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைப்பார்கள். மாவட்ட கலெக்டர் கையொப்பமிட்டு, கருவூலகத்துக்கு இந்த விண்ணப்பம் சென்று, அங்கிருந்து சம்பந்தப்பட்ட இன்சூரன்சு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை உறுதி செய்து, சம்பந்தப்பட்ட தொகையை இன்சூரன்சு நிறுவனம் வழங்கும்.

ஆனால் குமரி மாவட்டத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்து மருத்துவ சிகிச்சை பெற்றவர்கள் அதற்கான இன்சூரன்சு தொகையை பெற முடியாமல் மாத கணக்கில் தவிக்கிறார்கள்.மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைைமயில் விசாரணை முடிவடைந்து, கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பம் தேக்கம் அடைந்துள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பம் கலெக்டர் அலுவலகத்தில் தேங்கி கிடப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எனது மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு ஆஞ்சியோகிராம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து நானும் சம்மதம் தெரிவித்து அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் மூன்றரை லட்சம் வரை செலவானது. நான் ஏற்கனவே தமிழக அரசின் காப்பீடு திட்டத்தில் உள்ளேன். எனது பிரீமிய தொகையை பொறுத்தவரை ரூ.4 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என்றார்கள். இதையடுத்து சம்பந்தப்பட்ட இன்சூரன்சு நிறுவனத்திடம் இருந்து சிகிச்சைக்கான தொகையை பெற விண்ணப்பம் அளித்தேன்.

கருவூலகத்தில் இருந்து, சுகாதாரதுறை இணை இயக்குனர் (குடும்ப நலம்) அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இணை இயக்குனர் தலைமையில் குழு கூடி என்னிடம் விசாரணை நடத்தினர். இன்சூரன்சு நிறுவன பட்டியலில் இல்லாத மருத்துவமனைக்கு ஏன் கொண்டு சென்றீர்கள் என்றனர். உயிருக்கு போராடிய நிலையில் எனது மனைவியை நான், பட்டியலில் உள்ள மருத்துவமனையை தேடி பிடித்து கொண்டு செல்ல முடியாது.

எனவே தான் அவசர தேவைக்காக அந்த மருத்துவமனையில் சேர்த்தேன் என்றேன். இது தொடர்பாக ஏற்கனவே எமர் ெஜன்சிக்கான கடிதமும் அனுப்பி இருந்தேன்.  இந்த பரிசீலனையின் போது, சம்பந்தப்பட்ட இன்சூரன்சு நிறுவனத்தினரும் உடன் இருந்தனர். என்னை போல் சுமார் 25 பேர் வரை அன்றைய தினம் வந்து இருந்தனர். பின்னர் எங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் கலெக்டரிடம் ஒப்புதல் வாங்கி, இன்சூரன்சு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து பணம் வரும் என்றனர். ஆனால் 4 மாதம் வரை ஆகியும் இன்னும் அந்த விண்ணப்பம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரவில்லை.

என்னை போல் பலருக்கும் இது போன்று பணம் வராத நிலை உள்ளது. இன்சூரன்சில் சேருவதே அவசர தேவைக்கு செலவழித்து விட்டு பின்னர் பணத்ைத பெறலாம் என்பது தான். ஆனால் இன்சூரன்சு நிறுவனத்துக்கு ஆதரவாக விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலகத்தில் பிடித்தம் செய்து வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார்கள் என்றார். சிகிச்சை அளித்த சம்பந்தப்பட்ட மருத்துவமனை, அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளதா? அந்த மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்ய தகுதியானது தானா? என்பதை பரிசீலனை செய்ய வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உண்டு. அவ்வாறு  பரிசீலனை முடிந்து மாத கணக்கிலும், வருட கணக்கிலும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட இன்சூரன்சு நிறுவனத்துக்கு அனுப்பாமல் பிடித்து வைத்திருப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related Stories: