கோபி அருகே அரசு பள்ளியில் பழுதாகி கிடக்கும் விளையாட்டு கருவிகள்

கோபி, நவ.14:  கோபி அருகே செல்லக்குமாரபாளையம் ஆரம்பப்பள்ளியில் விளையாட்டு கருவிகள் பராமரிப்பின்றி கிடக்கிறது. கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி செல்லக்குமாரபாளையத்தில் ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் செல்லக்குமாரபாளையம், மாரப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விளையாட்டு கருவிகள் வழங்கப்பட்டது. இது சில மாதம் மட்டுமே  பயன்பாட்டில் இருந்தது. பின்னர் பழுதடைந்தது.

அதன்பின், பள்ளி கல்வித்துறை உடைந்த விளையாட்டு கருவிகளை சரி செய்யவில்லை. இதனால் விளையாட்டு மைதானத்தில் செடி, கொடிகள்  முளைத்து  மாணவ, மாணவிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து பெற்றோர் கூறுகையில்,`பள்ளிக்கூடத்தை சுற்றிலும் சுமார் 3 கி.மீ. தொலைவில் இருந்து மாணவ, மாணவிகள் படிக்க வருகின்றனர். மாணவர்கள் ஓய்வு நேரங்களில் விளையாடுவதற்காக வழங்கப்பட்ட விளையாட்டு கருவிகள் உடைந்து பல ஆண்டு ஆகியும் இதுவரை புதிய விளையாட்டு கருவிகள் வழங்கவில்லை. உடனடியாக உடைந்த விளையாட்டு கருவிகளை அகற்றிவிட்டு புதிய விளையாட்டு கருவிகளை வழங்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: