கன்னியாகுமரி சீசன் கடை ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் மாநகராட்சி ஆணையர் அழைப்பு

கன்னியாகுமரி, நவ.14:   கன்னியாகுமரி சீசன் கடை ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் சரவணக் குமார் கூறினார். கன்னியாகுமரியில்   ஐயப்ப பக்தர்கள் சீசன் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதற்காக தற்காலிக   கடைகள், பார்க்கிங், டாய்லெட் ஆகியவை ஏலம் நடந்து வருகிறது. வழக்கமாக   கன்னியாகுமரி பேரூராட்சியில் நடக்கும் ஏலத்தின்போது அனைத்து கடைகளையும்   கன்னியாகுமரியை சேர்ந்த 5 பேர் ஏலம் எடுப்பார்கள்.  பின்னர் அந்த கடைகளை   வியாபாரிகளுக்கு அதிக வாடகைக்கு கொடுப்பார்கள். இதனால் உண்மையான வியாபாரிகள்   பாதிக்கப்பட்டனர்.  இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஒரு வியாபாரிக்கு ஒரு கடை மட்டுமே வழங்க   வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி இந்த ஆண்டு ஒரு வியாபாரிக்கு  ஒரு  கடை என வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 2 கட்டமாக ஏலம் நடந்தாலும்  இதுவரை  66 கடைகள் மட்டுமே ஏலம் போய் உள்ளது. வழக்கம்போல் தனி நபர்களின்  ஆதிக்கம்  இருக்கும் என நினைத்து வெளி மாவட்டங்களை  சேர்ந்த வியாபாரிகள்  வராததால்  கடைகள் இதுவரை ஏலம் ேபாகாமல் உள்ளன. உள்ளூரில் உள்ள வியாபாரிகளும், தங்களுக்கு கடைகள் கிடைக்காது என்பதால் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில்  உயர் நீதிமன்ற  உத்தரவுபடி தற்காலிக கடைகளை ஏலம் விட சிறப்பு குழு  அமைக்கப்பட்டுள்ளது. வருவாய்  கோட்டாட்சியர் மயில் தலைமையில்  அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில்  நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர்  சரவணகுமார், தாசில்தார் அப்துல் மன்னா,  பேரூராட்சி இளநிலை உதவியாளர்  சண்முக சுந்தரம், சுகாதார ஆய்வாளர் ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர்.  இக்குழு ேநற்று கடற்கரை சாலையில் சீசன் கடை அமைய உள்ள  பகுதிகளை நேரில் சென்று  ஆய்வு செய்தனர்.ஆய்விற்கு பின்னர் மாநகராட்சி ஆணையர்  சரவணகுமார்  நிருபர்களிடம் கூறியதாவது:

உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஒரு வியாபாரிக்கு ஒரு  கடை மட்டுமே வழங்கப்படும்.  பேரூராட்சி  அலுவலகம் முன்  டெண்டர் பாக்ஸ் வைக்கப்படும். கடை தேவைப்படும் வியாபாரிகள்  நேரடியாக வந்து  தங்களுக்கு ஏற்ற தொகையை குறிப்பிட்டு டெண்டர் பாக்சில் போட  வேண்டும்.  அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக கேட்பவர்களுக்கு கடை  வழங்கப்படும். எவ்வித பாரபட்சமும் இன்றி  வழக்கமான ஏல விதிமுறைகள் பின்பற்றப்படும். எனவே அச்சமின்றி யார் வேண்டுமானாலும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.  இது தொடர்பாக  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து  நகராட்சிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.  அந்தந்த நகராட்சி மூலம்  வியாபாரிகளுக்கு சீசன் கடைகள் குறித்த தகவல்களை  தெரிவித்து ஏலத்தில்  கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.  இந்த ஆய்வின்போது கன்னியாகுமரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு, மாவட்ட சுற்றுலா அதிகாரி நெல்சன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: