அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் படுக்கை குறைவால் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலம்: மேலும் தொற்று பரவும் அபாயம்

திருவள்ளூர், நவ. 14: திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் பிரிவில், போதிய படுக்கை வசதியில்லாததால், காய்ச்சலில் அனுமதிக்கப்பட்டு உள்ள குழந்தைகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் உள்ளது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு இயங்கி வருகிறது. இதில், தினமும் ஏராளமான குழந்தைகள் சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது, டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் இன்றி சிகிச்சைக்கு வரும் குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர். இந்த பிரிவில் படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளதால், குழந்தைகளை தரையில் படுக்க வைக்க கூறுகின்றனர்.

வார்டின் தரைப்பகுதி, சுகாதாரமற்ற முறையில் அமைந்துள்ளதுடன், அங்கு வழங்கப்படும் குடிநீரும் தூய்மையாக இல்லை. கழிப்பறையும் பராமரிப்பின்றி, துர்நாற்றம் வீசுகிறது. படுக்கைகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை. இப்பிரச்னைகளால், காய்ச்சலில் அனுமதிக்கப்பட்டுள்ள  குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், ‘போதிய படுக்கை இல்லாததால் குழந்தைகளை தரையில் படுக்க வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். தரையும் சுகாதார வசதியின்றி உள்ளதால், தொற்றுநோய் பரவுகிறது. எனவே, கூடுதல் படுக்கைகள் அமைத்து, இப்பிரிவை சுகாதாரத்தோடு பராமரிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

ரத்த பரிசோதனைக்கு காத்திருந்த நோயாளிகள் மயக்கம்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குறுகிய கட்டிடத்தில் புறநோயாளிகள் பிரிவு இயங்கி வருகிறது. இங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும் புறநோயாளிகள் சீட்டு பெற, மருத்துவர்களிடம் சிகிச்சை பெற, ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள, மாத்திரைகள் வாங்க, ஊசி போட்டுக்கொள்ள என ஆங்காங்கே நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. புறநோயாளிகள் சீட்டு பெற, ஆண்கள் சிகிச்சை அறை, பெண்கள் சிகிச்சை அறை, ஆய்வகம், ஊசி போடுமிடம், கட்டு கட்டுமிடம் என அனைத்துக்கும் செல்ல ஒரே வழிதான் உள்ளது. இந்த வழியில்தான் நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெற காத்துக் கிடக்கின்றனர். இதனால் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

நேற்று மட்டும் டெங்கு பீதியால், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள குவிந்தனர். அவர்கள் உட்கார இடமின்றி சுவரில் சாய்ந்தபடியும், உடன் வந்தவர்கள் மீது சாய்ந்த படியும் காத்துக் கிடந்தனர்.இதில், பல நோயாளிகள் மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கு நோயாளிகள் உட்கார வசதி செய்துதர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: