பாதிரிவேடு அங்கன்வாடி அருகே திறந்த வெளியில் ஊசி, மருந்து குவியல்: தொற்று நோய் பீதியில் குழந்தைகள்

கும்மிடிப்பூண்டி, நவ. 14: கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அங்கன்வாடி மையம் அருகே காலி மைதானத்தில் வீசப்பட்டுள்ள ஊசி மற்றும் மருந்து கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.  ஒவ்வொரு வீடுகளிலும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட  கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு, பாதிரிவேடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஒட்டி கால்நடை  மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆடு, மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பு மருத்துவம் பார்ப்பதற்காக வந்துள்ளனர். அப்போது கோமாரி நோயினை தடுக்கும் வகையில் ஆடு, மாடுகளுக்கு பயன்படுத்தப்படும் ஊசி மற்றும் மருந்து பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் திறந்தவெளியில் போடப்பட்டு இருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கால் நடை மருத்துவமனையை ஒட்டியுள்ள அங்கன்வாடி மையத்துக்கு தினமும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் வந்து படிக்கின்றனர். இவர்கள்  அங்கன்வாடி மையத்தை ஓட்டியுள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விளையாடுகின்றனர். கால் நடை மருத்துவமனையில் பயன்படுத்திய ஊசி மற்றும் மருந்து பாட்டில்கள், மருத்துவ கழிவு பொருட்களை திறந்த வெளியில் வீசுகின்றனர். இதை அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் எடுத்து விளையாடுகின்றனர். அப்போது எதிர்பாராமல் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் ள்ளது. மேலும், மருந்து பாட்டில்களை எடுத்து விளையாடும்போது பல்வேறுவிதமான நோய் தொற்று ஏற்படும். இது குறித்து பலமுறை கால்நடை மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் கூறியும், திறந்த வெளியில் வீசி செல்கின்றனர். இதனால் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து கால்நடைகளுக்கு பயன்படுத்திவிட்டு விசிறி எறிந்துள்ள மருத்துவ கழிவுகளை அகற்றவும், கவனக்குறைவாக உள்ள ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories: