பஸ் பாஸ் கேட்டதால் ஆத்திரம் போதையில் நடத்துனரின் சட்டையை பிடித்து தகராறு: கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: பஸ் பாஸ் கேட்டதால் ஆத்திரமடைந்து நடத்துனரின் சட்டையை பிடித்து தாக்க முயன்ற, குடிபோதையில் இருந்த மாநில கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (தடம் எண் 27பி) பேருந்து கோயம்பேட்டில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி நேற்று முன்தினம் மாலை வந்தது. திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் வரும்போது மாநில கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறினர். அவர்களிடம் நடத்துனர் கோபிநாத் பஸ் பாஸ் காட்டும்படி கேட்டுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த இரண்டு மாணவர்கள் “எங்களிடமே பாஸ் கேட்பதா” என்று கூறி நடத்துனர் கோபிநாத் சட்டையை பிடித்து தகாத வார்த்தைகளில் பேசி தாக்க முயன்றனர். இதனால் நடத்துனருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து நடத்துனர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், நடத்துனருடன் தகராறில் ஈடுபட்டவர்கள் மாநில கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் கன்னிகாபுரம் வெங்கடேசபுரத்தை சேர்ந்த பிரேம்குமார் (19), அண்ணாநகர் 12வது மெயின் ரோட்டை ேசர்ந்த கவியரசன் (19) என தெரியவந்தது. இருவரும் அதிகளவில் மது குடித்து இருந்ததும் தெரியவந்தது. உடனே  இரண்டு மாணவர்களையும் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது மாணவர்கள் இருவரும் மது குடித்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இரண்டு மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் திருவல்லிக்கேணியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: