பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு பயிற்சி

நாமக்கல், நவ. 13:நாமக்கல்லில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் கலந்து கொண்டார். அவர் பேசுகையில்,

அரசு பள்ளிக்கு வரும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியம். இன்றைய சமூகத்தில் பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு இணையாக உள்ளது. பெண்களின் பாதுகாப்பு ஒட்டு மொத்த சமுதாயத்தின் பாதுகாப்பாக கருதப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்களைவிட மாணவியர் தான் நல்ல முறையில் படிக்கிறார்கள். எனவே ஆசிரியைகள், பெண் குழந்தைகளுக்கு எது நல்லது? எது கெட்டது என்பதை சொல்லி தரவேண்டும். ஒழுக்கத்தை அவர்களை உணர செய்யவேண்டும். பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடை நிற்றல் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு மாணவியரை பற்றியும் ஆசிரியைகள் புரிந்து வைத்து கொள்ளவேண்டும். இன்றைய சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் தொல்லைகள் குறித்து அதில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது குறித்தும் ஆசிரியைகள் மாணவிகளுக்கு விளக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முகாமில், தெற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கேசவன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா, சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் யோகலட்சுமி, பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Related Stories: