தொப்பப்பட்டியில் சூறைக்காற்றுக்கு 1000 வாழை மரங்கள் சேதம்

நாமகிரிப்பேட்டை, நவ.13: நாமகிரிப்பேட்டை அடுத்த தொப்பப்பட்டியில் கனமழையில் ₹3 லட்சம் மதிப்பிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது. கடந்த சில நாட்களாக தொப்பப்பட்டி, ஆர்.புதுப்பட்டி, மெட்டாலா, மங்களபுரம், சீராப்பள்ளி, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழையுடன் சூறைக்காற்று அடித்ததால் நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள தொப்பப்பட்டியை சேர்ந்த விவசாயி நடராஜன் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் குலையுடன் விழுந்து சேதமானது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு பயிரிடப்பட்ட வாழை மரங்கள் இன்னும் 20 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாரான நிலையில் 1000க்கும் மேற்பட்ட மரங்கள் வாழைக்குலை சாய்ந்தது. இதனால் பல லட்சம் நஷ்டமானது என நடராஜன் தெரிவித்தார். சேதமடைந்த வாழை மரங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: