டெங்கு, தொற்றுநோய் பீதியில் சின்னக்கட்டளை கிராம மக்கள்

பேரையூர், நவ. 13: சேடபட்டி அருகே உள்ள சின்னக்கட்டளை கிராமத்தில் உள்ள தெருமுழுவதும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, டெங்கு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் கிராமமக்கள் உள்ளனர். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னக்கட்டளை ஊராட்சி. இந்த கிராமத்திலுள்ள மேற்குதெரு, 4வது வார்டு முழுவதும் உள்ள தெருக்களில் தேங்கி கிடக்கும் சேறும், சகதியில் தான் குடியிருப்பு வாசிகள் நடந்து சென்று வருகின்றனர். இங்கு தெருக்களில் தேங்கி கிடக்கும் சாக்கடை மற்றும் மழைத்தண்ணீர் தேக்கத்தால் இரவு நேரங்களில் கொசுக்கடியால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மேலும் சாக்கடை நீண்டநாள் தேங்கி கிடப்பதால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது, பகலிலேயே கொசு கடிப்பதால், டெங்கு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமாக சின்னக்கட்டளையைச் சேர்ந்த கருப்பையா கூறும்போது, தெரு முழுவதும் மழைக்காலங்களில் சாக்கடை தேங்கி கிடக்கிறது. இந்த தெருவிற்கு இதுவரை சாலைகள் அமைக்கவில்லை. இந்த வழியாக செல்லக்கூடிய நீர்வரத்துப்பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளதால் இந்த தெரு முழுவதும் சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றத்தில் வாழ்கிறோம். மேலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி விடுமோ என அச்சமாக உள்ளது என்றார்.

இதேபோல் சுப்புதாய் கூறும்போது, இந்த சாக்கடையை கடந்துதான் வீட்டிற்கு செல்லமுடிகிறது, பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகளும் யூனிபார் உடைகளுடன் சாக்கடையில் கால் வைத்துதான் செல்கின்றனர். இதனால் அருகிலுள்ள குழாயில் உடை மற்றும் கால்களை கழுவித்தான் பள்ளிக்கு செல்ல முடிகிறது. வீட்டிற்கு வரும்போதும் இதே நிலைதான். இதனால் தொற்று நோய் பரவிவிடுமோ என பயமாக உள்ளது என்று கூறினார். பழனியம்மாள் கூறும்போது, இந்த தெருக்களில் உள்ள சாக்கடைக்குள் தான் குடிநீர் ஆழ்துளை குழாய் உள்ளது. இதில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்படும் போது சாக்கடை நீர் கலந்து கலங்கலான குடிநீராகத்தான் வருகிறது. வேறு வழியின்றி இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் இந்த தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறோம். எனவே தேங்கி கிடக்கும் சாக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இது குறித்து சின்னக்கட்டளையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்த பகுதியிலுள்ள தெருக்கள் முழுவதிலும் முறையாக சாலைகள் அமைக்க வேண்டும். முதலில் தேங்கியுள்ள சாக்கடையை அப்புறப்படுத்தி இப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்வரத்து பகுதியை திறந்துவிட்டு மேற்குதெரு 4வது வார்டு மக்களுக்கு தெருச்சாலைகள் மற்றும் வாறுகால்கள் அமைத்து தரவேண்டும். இது சம்மந்தமாக பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவொரு நவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சாக்கடை தேங்கியுள்ள பகுதியில்தான் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகமே செயல்பட்டு வருகிறது. யூனியன் நிர்வாகத்திற்கு பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: