100 நாள் வேலை தற்போது 20 நாள் வேலையாக மாறிவிட்டது

திருமங்கலம், நவ.13: 100 நாள் வேலைதிட்டம் தற்போது 20 நாள் வேலையாக மத்திய அரசு மாற்றிவிட்டது என விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் குற்றம்சாட்டினார். திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட திரளி, கரிசல்பட்டி, ஆலம்பட்டி, மேலக்கோட்டை, கீழக்கோட்டை, மைக்குடி உள்ளிட்ட கிராமங்களில் விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் ஆய்வு நடத்தினார். எம்பியுடன் திருமங்கலம் பிடிஓ உதயகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். கிராமங்களில் பொதுமக்களை சந்தித்த எம்பி., தேசிய ஊரகவேலைவாய்ப்புத்திட்டம், தூய்மைஇந்தியா திட்டம், ஜன்சக்தி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என கேட்டறிந்தார். எம்பியிடம் கிராமமக்கள் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலைகள் வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டினர். பொதுமக்களின் குற்றங்களுக்கு பதில் அளித்த திருமங்கலம் பிடிஓ உதயகுமார், தற்போது 100 நாள் வேலைதிட்டத்தில் மண்வேலை மட்டுமின்றி வரத்துகால்வாய், உறிஞ்சிகுழாய், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. கிராமம்வாரியாக இவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து எம்பி மாணிக்கம்தாகூர் பொதுமக்களிடம் 100 வேலைவாய்ப்புத்திட்ட அடையாளஅட்டைகளை வாங்கி பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் எம்பி கூறுகையில், திருமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தேன். அதில் முக்கியமான 100 நாள் வேலைதிட்டம் தற்போது 20 நாள் வேலை திட்டமாக மாறியுள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த திட்டத்தினை முடக்கி வருகிறது. இந்தாண்டு முடிவடைந்துள்ள 10 மாத காலகட்டங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 20 முதல் 25 நாட்கள் வரையில்தான் இந்த திட்டத்தில் பணிகள் நடைபெற்றுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். மீதமுள்ள 2 மாதங்களில் முடிந்தவரையில் பணிகளை விரைவுபடுத்திவிடுகிறோம் என்றனர் என தெரிவித்தார். எம்பியுடன் காங்கிரஸ் கட்சி தெற்குமாவட்ட தலைவர் ஜெயராமன், திமுக திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தனபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றனர்.

Related Stories: