உரம் தயாரிக்கும் திட்டப்பணியில் தொய்வு

ராஜபாளையம், நவ. 13: ராஜபாளையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், உரம் தயாரிக்கும் திட்டப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் வரிப்பணம் வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் நகராட்சியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், குடியிருப்புப் பகுதியில் சேரும் குப்பைகளை தரம்பிரித்து, அதிலிருந்து இயந்திரம் மூலம் உரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நகரில் 6 இடங்களை தேர்வு செய்து, அதில் கட்டுமானப் பணிக்கு டெண்டர் விடப்பட்டது. இதில், இரண்டு இடங்களில் மட்டும் பணிகள் நடந்துள்ளன. பாக்கியுள்ள நான்கு இடங்களில் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையிலேயே உள்ளது. இதனால், ஆங்காங்கே குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களுக்கு முன் குடியிருப்பு பகுதிகளில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், உரம் தயாரிக்க பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அப்பகுதி பொதுமக்களிடம் கருத்து எதுவும் கேட்கவில்லை. இதனால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நிறுத்தப்பட்டன. எனவே, மாற்று இடங்களை தேர்வு செய்து, அதற்கான ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த வேண்டும். இந்த திட்டம் மூலம் விவசாயிகளுக்கு தேவையான இயற்கை உரம் கிடைக்கும் என்பதால், உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Related Stories: