சாலை, மின்விளக்கு வசதியில்லை நிறைவாழ்வு நகரில் ‘குறை’ வாழ்வு

விருதுநகர், நவ. 13: விருதுநகர் அருகே, கூரைக்குண்டு ஊராட்சியில் உள்ள நிறைவாழ்வு நகரில் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் குடியிருப்புவாசிகளை விஷஜந்துகள் அச்சுறுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் ஆத்துப்பாலம் பஸ் நிறுத்தம் அருகில் கூரைக்குண்டு ஊராட்சி பகுதியில் உள்ள நிறைவாழ்வு நகரில் நிறைவாழ்வு அன்னை ஆலயமும், அதைத் தொடர்ந்து 80க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. இந்த நிறைவாழ்வு நகர் ஆலயத்திற்கு செல்வதற்காக கௌசிகா நதி நீர்வரத்து கால்வாயில் தனியாரால் பல லட்சம் செலவில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிறைவாழ்வு நகரில் உள்ளே செல்வதற்கான சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக உள்ளன. அனைத்து தெருக்களுக்கும் சாலை வசதி இல்லாத நிலையில் தெருவிளக்குகளும் இல்லை. இதனால், இரவு நேரங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பாம்பு கடிக்கு இப்பகுதி மக்கள் அடிக்கடி ஆளாகி வருகின்றனர். நிறைவாழ்வு நகரில் அனைத்து தெருக்களுக்கும் சாலை அமைக்க வேண்டும். மின்விளக்குகள் பொருத்த வேண்டும். வாறுகால் வசதி செய்து தர வேண்டுமென மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகள், வாறுகால், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என நிறைவாழ்வு நகர் குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: