மெகா பள்ளத்தில் மழைநீர் தேக்கம்

விருதுநகர், நவ. 13: விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்ள மெகா பள்ளங்களில் மழை நீர் தேங்குவதால், டெங்கு கொசு உருவாக வாய்ப்புள்ளது என நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர். விருதுநகரில் மல்லாங்கிணறு ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளியாக 490 பேரும், வெளிநோயாளிகளாக தினசரி 1,500 பேரும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனையின் பக்கவாட்டு வாயிலில் அவசர சிகிச்சை மையம், கண் மருத்துவமனை, சி.டி. ஸ்கேன் மையம், நர்சிங் பயிற்சி கல்லூரி, மாணவியர் விடுதிகள், டெங்கு காய்ச்சல் சிகிச்சை மையம், தீவிர காய்ச்சல் பிரிவு, பல், பிசியோதெரபி, ஹெச்ஐவி தொற்று நோய் சிகிச்சை பிரிவுகள் உள்பட பல்வேறு சிகிச்சை மையங்கள் உள்ளன.அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற பகல், இரவு என 24 நேரமும் தினசரி 300க்கும் அதிகமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். விபத்தில் காயம், விபத்தில் உயிரிழந்து வருவோரின் உறவினர்கள் அவசர சிகிச்சை பிரிவு முன்பகுதியில் வெளிப்புறத்தில் அமர்ந்து இருப்பர்.இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவின் முன்பகுதி காலியிடத்தில் உள்ள 3 மெகா பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில், டெங்கு கொசு உருவாகும் அவலம் உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 கோடி மதிப்பில் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.கட்டிடங்கள் கட்ட தோண்டி மண், சரளை மண் குவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குவிக்கப்படும் மண்ணை எடுத்து மெகா பள்ளங்களில் கொட்டி மூட மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: