பயன்பாடில்லா மாவட்ட விளையாட்டு அரங்கம்

விருதுநகர், நவ. 13: விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்களும் இல்லை; போதிய பணியாளர்களும் இல்லை. மைதானங்கள் புதர்மண்டிக் கிடக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கல்வி மட்டுமல்லாமல், விளையாட்டிலும் மாவட்டம் பின்தங்கி வருகிறது. விருதுநகரில் உள்ள சாத்தூர் ரோட்டில் நான்குவழிச்சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது. 27 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த விளையாட்டு மைதானத்தில் கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து, ஸ்குவாஸ், பாக்சிங், நீச்சல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளுக்கான மைதானங்களும் உள்ளன. இவற்றில் பயிற்சி அளிப்பதற்கு 12 விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட விளையாட்டு அரங்கில் ஒரு பயிற்சியாளர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. காலியாக இருந்த மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடம் ஒரு மாதத்திற்கு முன்புதான் நிரப்பப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வீரர், வீராங்களை தேர்வு செய்து உருவாக்க ஒரு விளையாட்டுக்கு கூட பயிற்சியாளர் இல்லாததால் விளையாட்டில் பின்தங்கி உள்ளது. கல்வியில் முதலிடம் இருந்த விருதுநகர் மாவட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்தங்கி வரும்நிலையில், விளையாட்டில் பல ஆண்டுகளாக பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள கால்பந்து மைதானம் முதல் தடகள மைதானம் வரை, அனைத்து மைதானங்களும் புதர்மண்டி கிடக்கின்றன. மழை காலமாக இருப்பதால் கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, தடகள மைதானங்கள் சேறும், சகதியுமாக காட்சி தருகிறது. இடிந்து விழும் நிலையில் உள்ள ஸ்குவாஸ் மைதானம் கட்டிடம் மூடிக்கிடக்கிறது. பாக்சிங் மைதானம் குண்டும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நீச்சல் குளத்திற்கு செல்லும் பாதை சேறும், சகதியுமாக உள்ளது. இக்குளத்தின் சுற்றுச்சுவர் கிழக்குப்பகுதியில் உயரமாக இல்லாததால் வெளிப்புறத்தில் இருந்து பார்க்கும் வகையில் இருப்பதால் பெண்கள் பயிற்சி வருவதற்கு தயங்கம் நிலை தொடர்கிறது.  மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிப்பறை ‘செப்டிக் டேங்க்’ நிறைந்து கழிவுகளுடன் கழிவுநீர் மைதானத்தை நோக்கி வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இரவு காவலாளி, மார்க்கர் உள்ளிட பல அடிப்படை பணியாளர் பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளது. பயிற்சியாளர் முதல் அடிப்படை பணியாளர்கள் என யாரும் இல்லாததால் விளையாட்டு மைதான பயன்பாடு குறைந்து வருகிறது. இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கூறுகையில், ‘12 விளையாட்டு ‘கோச்’ மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மைதானத்தில் உள்ள குறைகள் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: