ரெடியானது புதுதாராபுரம் ரயில்வே கேட் சாலை

பழநி, நவ. 13: தினகரன் செயதி எதிரொலியாக பழநி புதுதாராபுரம் ரயில்கேட் சாலை சீரமைக்கப்பட்டதால் வாகனஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். பழநி- புதுதாராபுரம் சாலையில் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். காரணம் தாராபுரம், சூலூர், சேலம், திருப்பூர், ஈரோடு, வெள்ளைகோயில் போன்ற ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இச்சாலையையே அதிகளவு பயன்படுத்துவது வழக்கம். இச்சாலை பழநி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. இங்கு ரயில்வே கேட்டும் அமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றிற்கு பகல் நேரங்களில் மட்டும் சுமார் 10 முறைக்கு மேல் ரயில்வே கேட் அடைக்கப்பட்டு, திறக்கப்படும். அப்போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்பது வழக்கம்.

    இந்நிலையில் ரயில்வேகேட் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. தண்டவாளத்தை விட சாலை கீழே இறங்கி உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் வாகனங்களின் அடிபாகம் தண்டவாளத்தில் உரசி சேதமடைந்தது. இதனால் இருசக்கர வாகனஓட்டிகளில் பெரும்பாலானோர் நாள்தோறும் இச்சாலையை கடக்கும்போது கீழே விழுந்து சென்று வந்தனர். மேலும் கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்டவாளங்களில் உரசி நிற்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாக  இருந்தது. இதுதொடர்பாக கடந்த நவ.4ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி எதிரொலியானது. இதன் எதிரொலியாக நேற்று புதுதாராபுரம் ரயில்வே கேட் சாலையில் சீரமைப்பு பணிகள் துவங்கியது. 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சாலையை தண்டவாளம் அளவிற்கு உயர்த்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் இந்நடவடிக்கையால் வாகனங்கள் சிரமமின்றி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: