தீட்சசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி

திருக்காட்டுப்பள்ளி, நவ. 13: தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டாரம் தீட்சசமுத்திரம் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு கிராமப்புற பயிற்சி நடந்தது.பூதலூர் வேளாண்மை அலுவலர் நிவேதா வரவேற்றார். கூட்டு பண்ணையை திட்டத்தின் முக்கியத்துவம், கூட்டு விவசாய முறைகள் மற்றும் பயன்கள் குறித்து சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் கண்ணன் பேசினார். மேலும் பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்ட முறைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

இதைதொடர்ந்து சம்பா நெல் சாகுபடி தொழில்நுட்பங்களில் களை நிர்வாகம் மற்றும் நீர் நிர்வாகம் முறை, வேளாண்மை துறைகளில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில திட்டங்கள் குறித்து பேசியதுடன் பஞ்சகவ்யம் தயாரிக்கும் செயல்விளக்கம் அளித்தார்.

அனைத்து விவசாயிகளும் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்வது, நுண்ணீர் பாசன திட்டத்தில் உள்ள மானிய திட்டங்கள், பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவி திட்டம் மற்றும் நெற்பயிரில் வரப்பு பயிரின் முக்கியத்துவம் குறித்து பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சரசு பேசினார்.ராபி பருவத்தில் நெல் சம்பா பயிருக்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு செய்ய தேவையான ஆவணங்கள், பயிர் காப்பீட்டுத்தொகை, செலுத்த வேண்டிய பிரீமியத்தொகை மற்றும் பிரீமியம் செலுத்த வேண்டிய கடைசி தேதி குறித்து துணை வேளாண்மை அலுவலர் எபிநேசன் பேசினார்.

Related Stories: