பெங்களூருவில் இருந்து காய்கறி லாரிகளில் குட்கா பதுக்கி கடத்தும் கும்பல்: சேலம் உள்பட 5 மாவட்டங்களுக்கு சப்ளை

சேலம், நவ. 13: பெங்களூருவில் இருந்து காய்கறி லாரிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கி கடத்தி வரப்படுகிறது. இதனை மாநில எல்லையில் தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழகத்தில் புகையிலை பழக்கம் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குட்கா, பான்பராக் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தட்டுப்பாடியின்றி கிடைத்து வருகிறது. சாதாரணமாக பெட்டிக்கடை முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் புகையிலை பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வதில் பெரிய நெட்வொர்க் இயங்கி வருகிறது. இவர்கள் கர்நாடகா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரயில், சொகுசு பஸ், லாரி, மினிவேன் மூலம் கடத்தி வருகின்றனர்.

அதிகாரிகளுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து, புகையிலை பொருட்கள் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், சேலத்தில் போதை புகையிலை பொருட்களின் விற்பனை அதிகளவு நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெங்களூரிலிருந்து காய்கறிகளை கொண்டுவருவது போல் லாரிகளில்  குட்கா, புகையிலை பொருட்கள் சேலத்திற்கு கடத்தி வரப்படுகிறது. இது ரகசியமாக குடோன்களுக்கு கொண்டு  செல்லப்பட்டு நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், ேகாவை, மதுரை, திருப்பூர்  உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. சேலம் மாநகர போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சூரமங்கலம், கிச்சிப்பாளையம் உள்பட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2 டன்னுக்கு மேல் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதேபோல், ஓமலூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட  போலீசார், காய்கறிகளை கொண்டு வருவது போல், லாரியில் 2டன் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தனர்.

அந்த லாரியுடன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல்லிலும் 2 டன் புகையிலை பொருட்கள் லாரியுடன் சிக்கியது.

 இச்சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  கைதானவர்களிடம்  நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் ெவளியாகியுள்ளது. பெங்களூரில் இருந்து, அங்கிருந்து மாதந்தோறும் 100 டன் குட்கா வகைகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கடத்துவது தெரியவந்ததுள்ளது. பெங்களூரிலிருந்து கடத்திவரப்படும் புகையிலை பொருட்களை தடுக்க போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் களம் இறங்கினாலே கடத்தல் கும்பலை பிடித்துவிடலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்வதை துரிதப்படுத்தயுள்ளோம். போலீசார், வணிகவரித்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து இப்பணி நடந்து வருகிறது. கடந்த மாதம்  5 டன் அளவுக்கு பான்மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து சேலத்திற்கு கடத்தி வந்து, சில மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த குடோனில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. சந்தேகப்படும் குடோன்களில் ஆய்வு செய்து வருகிறோம்,’’ என்றனர்.

Related Stories: