மகாமக குளக்கரையில் 16 சோடசலிங்கத்துக்கு அன்னாபிஷேக விழா

கும்பகோணம், நவ. 13: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள 16 சோடசலிங்க சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம் நடந்தது.கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றிலும் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 மண்டபங்கள் அமைந்துள்ளன. இதில் ஒவ்வொரு மண்டபத்திலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முக்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், புரணேஸ்வரர், கோணேஷ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபாகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என மொத்தம் 16 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.இவற்றை ஒருங்கிணைத்து சோடஷ மகாலிங்க சுவாமிகள் என அழைக்கப்படும். இத்தகைய சிறப்பு பெற்ற சோடஷ மாகலிங்க சுவாமிகள் 16க்கும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று காலை எண்ணெய், அரிசிபொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் என பலவித பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.இறுதியாக தயிருடன் கலந்த அன்னத்தை கொண்டு சிவலிங்க மேனியில் அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர் சோடஷ மகாலிங்க சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. இத்தகைய அன்னாபிஷேகத்தில் சிவலிங்கத்தின் மீதுள்ள ஒவ்வொரு சோற்று பருக்கையும் ஒவ்வொரு சிவலிங்கமாக காட்சியளிப்பதாக ஐதீகம். அன்னாபிஷேகம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை தரிசனம் செய்வதன் மூலம் ஒரே நேரத்தில் பல நூறு சிவலிங்கங்களை தரிசனம் செய்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. இத்தகையை அன்னாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை அபிமுகேஸ்வரர் ஆலய கிருத்திகை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர். மகாமக குளக்கரையி–்ல் உள்ள 16 மண்டபங்களும் நேற்று திறக்கப்பட்டது. இதில் நாள் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்: கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. அதன்படி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயில், வியாழசோமேஸ்வரன் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கவுதமேஸ்வரர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், கம்பட்ட விசுவநாதர் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில், சூரியனார்கோயில் சிவசூரியபெருமான் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.பட்டுக்கோட்டை:ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு பட்டுக்கோட்டை பூமல்லியார்குளம் கைலாசநாதர் கோயிலில் நேற்று அன்னாபிஷேக விழா நடந்தது.இதையொட்டி அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்து பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது சிறப்பம்சமாகும். முன்னதாக கைலாசநாதருக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கைலாசநாதரை வழிபாடு செய்தனர். அதேபோல் பட்டுக்கோட்டையில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது.பாபநாசம்:ஐப்பசி பவுர்ணமியையொட்டி பாபநாசம் திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: