கெங்கவல்லி அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

கெங்கவல்லி, நவ.13: கெங்கவல்லி அருகே வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி 7வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதசாமி மனைவி காமாட்சி(80). இவர், தனது மகள் சுமதியுடன் வசித்து வந்தார். காமாட்சியின் வீடு மண் சுவரால் ஆனது. கடந்த ஒரு வாரமாக பெய்த மழைக்கு வீட்டின் சுவர் முழுவதும் நனைந்து ஈரமாக இருந்துள்ளது. இந்நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு காமாட்சி, சுமதி வீட்டினுள் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை திடீரென மண்சுவர் இடிந்து விழுந்தது. கட்டிலில் படுத்திருந்த காமாட்சி மீது சுவர் விழுந்து அமுக்கியதில் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார்.

இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகே படுத்திருந்த சுமதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த கெங்கவல்லி வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர், காமாட்சியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை ஆத்தூர் கோட்டாட்சியர் துரை பார்வையிட்டார். அப்போது, உயிரிழந்த காமாட்சி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டமென கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்து பரிந்துரை செய்தார். சுவர் இடிந்து விழுந்து மகள் கண் முன்பே மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: