முதல்வர் பாதுகாப்பு பணிக்கு சென்றபோது விபத்தில் இறந்த போலீஸ்காரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

மேச்சேரி, நவ.13: முதல்வர் பாதுகாப்பு பணிக்கு சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த போலீஸ்காரரின் உடல் 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மல்லிகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ்(27). இவர், ஈரோடு ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பாரதியும் ஈரோடு ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர்கள் ஈரோடு மாவட்டம் கோபி அருகே கள்ளிப்பட்டியில் 2 மகன்களுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவர் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து பவானி, ஈரோடு வழியாக கோவைக்கு சென்றார். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக வரதராஜ் தனது டூவீலரில் கள்ளிப்பட்டியிலிருந்து சித்தோடுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஈரோடு சக்தி மெயின்ரோடு கரட்டடிபாளையம் அருகே வந்தபோது, சக்தியிலிருந்து கோபிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் வரதராஜின் டூவீலர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த வரதராஜை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த கோபி போலீசார் வரதராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சொந்த ஊரான மல்லிகுந்தத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு, கோபி டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: