உழவர் சந்தைகளுக்கு பெரிய வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு: கிலோ ₹74 க்கு விற்பனை

சேலம், நவ.13: சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து கிலோ ₹74 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் உழவர் சந்தைகளில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பெரிய வெங்காயம் கிலோ ₹30 முதல் ₹40 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைவின் காரணமாக பெரிய வெங்காயம் கிலோ ₹74க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் குறிப்பிட்ட காலத்தில் விளைச்சல் செய்ய முடியாமால் தவித்து வருகின்றனர். இந்நிலையில் உழவர் சந்தைக்கு பெரிய வெங்காயம் வரத்து பரவலாக குறைந்துள்ளது. இதனால் விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. பெரிய வெங்காயம் ₹74, சின்ன வெங்காயம் ₹55, இஞ்சி ₹80, கொத்தமல்லி ₹40, பொதினா ₹40, வெண்டைகாய் ₹30 என்று அனைத்து காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளது.’’ என்றார்.

Related Stories: