காவு வாங்க காத்திருக்கும் ஆழமான சாக்கடை

சின்னமனூர், நவ.13: குச்சனூரில் ஊரின் நடுவில் 8 அடி ஆழ சாக்கடை மூடப்படாமல் உள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது. விபரீதம் ஏற்படும் சாக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.   சின்னமனூர் அருகே குச்சனூர் மெயின் சாலையின் இருபுறங்களிலுள்ள குறுகிய சாக்கடைகள் மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. ஆக்கிரமிப்புகளின் பிடியிலிருந்ததை அகற்றி அகன்ற சாக்கடையாக மாற்றி புதிய வாறுகால் அமைத்தனர். சனீஸ்வரபகவான் கோயில் முன்பாக உயரமான புதிய பாலம் கட்டி நான்கு மாதங்கள் ஆகிறது.  இந்த பாலத்தின் இருபுறங்களிலும் ஆழமான மரணக்குழிகள் விடப்பட்டு திறந்த வெளியாக இருக்கிறது. அதனருகில் இருபுறங்களிலிருந்து வருகின்ற 8 அடி ஆழ சாக்கடைகள் சந்திக்கின்றன. நடந்து வருபவர்கள் இந்த குழிகளில் கவிழும் அபாயகரமான நிலை நிலவுகிறது. இதனை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், மாநில நெடுஞ்சாலைதுறையினர்தான் இந்த சாக்கடை வாறுகால்கள் மற்றும் பாலத்தை அமைத்தனர். சாக்கடை திறந்து கிடப்பதால் ஆட்கள் உள்ளே விழும் அபாயம் நிலவுகிறது. மேலும் இங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்களை உருவாக்கும் இடமாக மாறியிருக்கிறது. எனவே சாக்கடையை மூடவும் கழிவுநீர் தடையின்றி செல்லவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: