சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த கூடாது

உத்தமபாளையம், நவ.13: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு தமிழக எல்லையில் அய்யப்ப பக்தர்களுக்கு செய்யவேண்டிய வசதிகள் பற்றி சப்.கலெக்டர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இன்னும் சில தினங்களில் திறக்கப்பட உள்ளது. தமிழக-கேரளா எல்லையான குமுளி, கம்பம்மெட்டு வழியாக அதிகளவில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வார்கள். எனவே தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு செய்யவேண்டிய வசதிகள் பற்றிய ஆலோசனைக்கூட்டம், உத்தமபாளையம் சப்.கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் நடந்தது. டி.எஸ்.பி.அய்யாக்கண்ணு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வனத்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழக எல்லையான குமுளி பஸ்ஸ்டாண்டில் உள்ள கழிப்பறை மிக சுத்தமாக பராமரிக்கப்படவேண்டும். குடிநீர் வசதி செய்து தர கூடலூர் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். குமுளி, கம்பம்மெட்டு செல்லும் மலைப்பாதையில் பக்தர்கள் வசதிக்காக 24 மணிநேரமும் டாக்டர்கள் குழுவினர் பணியில் இருக்கவேண்டும். 108 ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் தமிழக பக்தர்கள் கேரளாவிற்கு செல்லும்போது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது. மலைப்பாதைகளில் இடையூறாக உள்ள கிளைகள், கொப்புகள் அகற்றப்படவேண்டும். ஆபத்தான இடங்களில் நெடுஞ்சாலைத்துறை தேவையான பராமரிப்பு பணிகளை செய்யவேண்டும். குண்டும், குழியுமான சாலைகள் இல்லாத நிலை வேண்டும். மகரஜோதி காலங்களில் அய்யப்ப பக்தர்கள் சுருளி அருவிக்கு அதிகளவில் வருவார்கள். எனவே சுருளியில் தேவையான பாதுகாப்புகள், தினந்தோறும் கழிவறை சுத்தம் செய்தல், பக்தர்கள் குளித்துவிட்டு போடக்கூடிய துணிகளை அப்புறப்படுத்தவேண்டும். ஒருவழிப்பாதையாக குமுளி சாலை மாற்றப்படும்போது, தேவையான வசதிகளை கம்பம்மெட்டு வழியே செய்வதும், காவல்துறை அய்யப்ப பக்தர்கள் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பிடவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். வட்டாரபோக்குவரத்து அதிகாரிகள் பெர்மிட் தரும்போது வாகனங்களை காக்கவைக்காமல் தருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மழை அதிகளவில் பெய்யும் காலங்களில் தேவையான மருத்துவ வசதிகள், அதிகமான டாக்டர்கள் இருப்பதுடன், நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றிடவேண்டும். பக்தர்களை ஏற்றிக்கொண்டு அதிகமான வேகத்தில் வரக்கூடிய வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், இரவில் தூக்கம் விழித்து வரக்கூடிய பக்தர்கள் வாகனங்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: