காட்பாடியில் ரூ16.45 ேகாடியில் மாவட்ட விளையாட்டு மைதான கட்டுமான பணி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

வேலூர், நவ.13: விளையாட்டு வீரர்கள் நிறைந்த வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு அரங்கம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இதையடுத்து வேலூரில் காட்பாடி, ஓட்டேரி, விருதம்பட்டு உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சில காரணங்களுக்காக கைவிடப்பட்டன. இதற்கிடையில் மாவட்ட விளையாட்டு மைதானம் ஊசூரில் அமைப்பதற்காக ரூ16.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க இருந்தது. இதற்கிடையில் காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான 36.68 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்து, அதற்கான புதிய அரசாணை வெளியானது. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட விளையாட்டு மைதானத்தின் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளரும், சென்னை மண்டல தலைமை பொறியாளருமான ராஜமோகன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பணிகள் விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது, சிறப்பு தலைமை பொறியாளர் (கட்டிடம்) ஞானமூர்த்தி, வேலூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் பழனி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதையடுத்து வேலூர் அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்து வரும் புதிய கட்டிட பணிகளை அவர் ஆய்வு செய்தார். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான 36.68 ஏக்கரில், தற்போது, 20 ஏக்கரில் மட்டுமே விளையாட்டு மைதான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் 12 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மைதானத்தில் 8 டிராக்குகளுடன் 400 மீட்டர் ஓடுதளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, கோகோ, நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு நலன் அரங்கம், பார்வையாளர் அரங்கம், கழிவறை, உணவகம் உள்ளிட்டவை அமைய உள்ளது’ என்றனர்.

Related Stories: