மாற்றுத்திறனாளிகள் முகாம் பயனில்லாமல் முடிந்தது

பந்தலூர், நவ. 13 :  பந்தலூர் தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நேற்று நடந்தது. பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார், தனிவட்டாட்சியர் லதா முன்னிலை வகித்தார் விஏஒ யுவராஜ் வரவேற்றார். பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதிகளில் இருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காலை 9 மணிமுதல் காத்திருந்தனர். ஊட்டியில் இருந்து மருத்துவர்கள் 12 மணிக்கு மேல் வருகை புரிந்ததால் மாற்றுத்திறனாளிகள் காத்திருந்து நொந்து போயினர். அதன் பின் மனநலம் மருத்துவர் பூர்னஜித், நரம்பியல் மருத்துவர் வினோத் ஆகியோர் வருகை தந்து மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர்.  இம்முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக உதவியாளர்கள் விஜயன்,  அந்தோணி ஜெரால்டு, சக்தி, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் பந்தலூரில் இருந்து கூடலூர் மற்றும் ஊட்டி பகுதிக்கு செல்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளதால், கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் ஏற்பாட்டின் பேரில் பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  நான்கு மருத்துவர்கள் பரிசோதித்து மாற்றுத்திறனாளிக்கான அட்டையில் கையெழுத்திட்டு அட்டை  வழங்கவேண்டும் என்ற நிலையில் இரண்டு மருத்துவர்களே வந்ததால் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற முடியவில்லை. மேலும்,  முகாமில் தெரிவு செய்யப்பட்ட 15 பேர் மீண்டும் ஊட்டி வரவேண்டும் என தெரிவித்ததால் மாற்றுத்திறனாளிக்கான முகாம் பயனில்லாமல் முடிந்து போனது.

Related Stories: