வீடு புகுந்து திருடிய தாய், மகன் கைது

பூந்தமல்லி: வளசரவாக்கம் பகுதிகளில் வீடு புகுந்து திருடிய தாய், மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வளசரவாக்கம் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் பட்டப்பகலில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன.  இது குறித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமை வீரன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர்  தலைமையில் தனிப்படைகள் அமைத்து, கொள்ளை சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் ஒரு வாலிபரும் அவருடன் ஒரு பெண்ணும் வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்கின்றனர். பின்னர், அந்த நபர் நகை, பணத்தை திருடிய பிறகு இருவரும் ஒன்றாக வெளியே செல்வது  போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும் ஒரு அலுவலகத்தில் இருவரும் உள்ளே சென்றுவிட்டு வெளியே வருவது போன்ற காட்சிகள் பதிவாகி  இருந்தது.

இதையடுத்து இருவரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது, இருவரும் வேலை கேட்டு வந்ததாகவும் செல்போன் நம்பர் கொடுத்து விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அந்த செல்போன் நம்பரை வைத்து விசாரணை  செய்ததில் காரைக்குடி, கலவை பொட்டல் பகுதியைச் சேர்ந்த சாந்தி (44), அவரது மகன் நாகராஜ் (20), என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்தனர்.விசாரணையில், வளசரவாக்கம் பகுதியில் தங்கி தாயும், மகனும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்று வேலை கேட்பது போல் நோட்டமிட்டதும், பின்னர் பூட்டியிருக்கும்  வீடுகளின்  பூட்டை உடைத்து உள்ளே  சென்று நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.மேலும், இவர்கள் மீது காரைக்குடி பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது  தெரியவந்தது. இவர்களிடமிருந்து 8 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் பணம் பறிமுதல் செய்து போலீசார், இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

   

Related Stories: