மேலூரில் ஒரு போக விவசாய பணி தீவிரம்

மேலூர், நவ. 12: முல்லைப் பெரியாற்றின் கடைமடை பகுதியான மேலூர் பகுதியின் 85 ஆயிரம் ஏக்கர் ஒரு போக சாகுபடி பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது.

முல்லைப் பெரியாற்றில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கும் அதனைத் தொடர்ந்து மதுரை கள்ளந்திரி வரையிலான இரு போக பாசனத்திற்கு ஏற்கனவே தண்ணீர் திறந்து விவசாய பணிகள் முடிவடைந்து நெல் அறுவடைக்கு தயராகி விட்டது. இதனை தொடர்ந்து மேலூர், திருமங்கலம், மதுரை வடக்கு, வாடிப்பட்டி பகுதியில் உள்ள 85 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கான ஒரு போக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து அக்டோபரில் தண்ணீர் திறக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்திலேயே திறக்க வேண்டிய தண்ணீர் கால தாமதமாக விவசாயிகளின் போராட்டத்திற்கு பிறகு திறக்கப்பட்டது. இதனால் காலதாமதமாக நாற்று நடவு பணிகளும் துவங்கியது. மேலூர் பகுதியில் உள்ள 26 ஆயிரம் ஏக்கரில் தற்போது நடவு பணிகள் துவங்கி உள்ளது. மேலூரின் 6, 7, 8வது வாய்க்கால்களில் தண்ணீர் விடப்பட்டுள்ளது. இக்கால்வாய்களில் இருந்து வரும் தண்ணீரை ஆங்காங்கே உள்ள கண்மாய்களில் தேக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அரசப்பன்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் விடப்பட்ட நிலையில், நேற்று தான் பனங்காடி கண்மாய்க்கு தண்ணீர் விடப்பட்டது. கண்மாய்களில் தண்ணீரை தேக்கிய பிறகே விவசாயிகள் நம்பிக்கையுடன் தங்கள் விவசாய பணிகளை துவக்குகின்றனர்.

மேலூரின் கடைமடையில் உள்ள பல கண்மாய்களுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை. இதனால் அப்பகுதியில் விவசாய பணிகள் இன்னும் சரிவர துவக்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் தீவிர விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் மேலூர் பகுதியில் உள்ள கண்மாய்களில் 60 சதவிகிதத்தை தாண்டி தண்ணீர் நிறைக்கப்பட்டு விட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து கொட்டக்குடி விவசாயி ரவி கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விவசாயத்திற்கு செலவாகிறது. கிணற்று பாசனம் மூலம் நெல் நாற்றங்கால் பாவி வைத்திருந்தவர்கள் உடனடியாக தங்கள் விவசாய பணிகளை துவக்கி விட்டனர். கால்வாயில் தண்ணீர் வந்த பிறகு நாற்றங்கால் பாவியவர்கள் மட்டும் தங்கள் பணிகளை துவக்க சற்ற காலதாமதமாகிறது. நாற்றுகள் கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், விவசாயத்திற்கு தேவையான யூரியா மட்டும் போதிய அளவில் கிடைக்கவில்லை. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: