வாடிப்பட்டி அருகே எட்டிகுளம் கண்மாயை சீரமைத்த மக்கள்

வாடிப்பட்டி, நவ.12: வாடிப்பட்டி அருகே சீரமைக்கப்படாமல் கிடந்த எட்டிகுளம் கண்மாயை குடிமராமத்துபணி மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கிராமபொதுமக்கள் சீரமைத்தனர். மதுரை வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி கிராமத்தில் எட்டிகுளம் கண்மாய் உள்ளது. சிறுமலை அடிவாரத்தில் உள்ள இக்கண்மாய் சுமார் 32ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 70ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெற்று வந்தன. மேலும் சாணாம்பட்டி, குரங்குதோப்பு, பெருமாள்பட்டி, சல்லக்குளம் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்துவந்தது. இக்கண்மாய் பருவமழை காலங்களில் சிறுமலையிலிருந்து வரக்கூடிய காற்றாற்று ஓடை வழியாக நீர் பெற்றுவந்தது. ஆனால், பல ஆண்டுகளாக கண்மாய் முறையாக தூர் வாரப்படாமலும், வரத்து கால்வாய் சீரமைக்கப்படாமலும், சீமைக்கருவேல மரங்கள் நிறைந்த காடாக காட்சியளித்தது. மேலும் பல ஆண்டுகளாக மழைபெய்தாலும் கண்மாய் நீரின்றி வறண்டு கிடந்தது.

இந்நிலையில் வாடிப்பட்டியில் உள்ள கிரட் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் கடந்த பல வாரங்களாக ரெப்கோ நுண்கடன் நிதிநிறுவன உதவியோடு இப்பகுதி சுயஉதவிக்குழுக்கள், இளைஞர் மன்றங்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து கண்மாயைச் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி கண்மாயின் நீர்வரத்து கால்வாயை சீரமைத்தல், சீமைக்கருவேல மரங்களை அகற்றியதுடன், தூர்வாரி குடிமராமத்து பணிகளை மேற்கொண்டனர். இதனால் தற்போது வறண்டு கிடந்த கண்மாயில் சற்று தண்ணீர் தேங்க ஆரம்பித்துள்ளது. வரத்துகால்வாய் சீரமைக்கப்பட்டதால் கண்மாய்க்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த கண்மாயில் தண்ணீர் நிரம்பிவருவதை கண்ட விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: