குப்பைத் தொட்டியான குடிநீர் கிணற்றை பாதுகாக்க நடவடிக்கை

மதுரை, நவ. 12: தினகரன் செய்தி எதிரொலியால்,குப்பைத் தொட்டியான குடிநீர் கிணற்றை பாதுகாக்க கோரிய வழக்கில் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் 100 ஆண்டு பழமை யான குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணறு தற்போது குப்பைத் தொட்டியாக மாறியுள்ளது. இதனால், கிணற்று நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிணற்றிலிருந்து துர்நாற்றம் வெளியேறுகிறது. கிணற்றில் கழிவுநீர் சேர்வதால், அருகிலுள்ள வீடுகளின் குடிநீரில் கிணற்று கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. இது குறித்த செய்தி கடந்த செப்.25ல் தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது.

இது தொடர்பாக கல்லணையைச் சேர்ந்த ராஜா(எ)மீனாட்சி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு செய்தார். அதில், பழமையான நீராதாரங்களை பாதுகாக்க  அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை. பயன்பாட்டில் இல்லாத இந்த கிணற்றை தூர்வாரி நிலத்தடி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிணற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், ெபாதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் குறிப்பிடும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: