தமிழக அரசின் பாராமுகத்தால் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மீண்டும் மூடப்படும் அபாயம்

அலங்காநல்லூர், நவ.12: மதுரை, மேலூர், கன்னிவாடி, அருப்புகோட்டை, திருமங்கலம், உசிலம்பட்டி கோட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகளின் ஜீவாதாராமாய் விளங்கியது. அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆண்டு கரும்பு அரவையை தொடங்க முடியாமல் நிதி நெருக்கடி மற்றும் கரும்பு பதிவு குறைவு காரணமாக ஆலைமூடும் அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆலையில் பணியாற்றும் அடிப்படை தொழிலாளர்கள், மேலாண்மை இயக்குநர், கரும்பு அலுவலர்கள், உதவி அலுவலர்கள்,களப்பணியாளர்கள் உள்ளிட்ட 350 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு 10 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதேபோல் கடந்த 3 ஆண்டுகளாக ஆலை அரவைக்காக கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கும் நிலுவைத்தொகை முழுமையாக வழங்கபடவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்னை காரணமாக இந்த ஆண்டு அரவை தொடங்குமா என்ற சந்தேகம் கரும்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் கரும்பு பதிவு குறைவு, சம்பள பாக்கி காரணமாக கரும்பு பெருக்கு உதவி அலுவலர்கள் 10 பேர் விருப்ப ஒய்வு வழங்க வேண்டி ஆலை மேலாண்மை இயக்குநர் சிவகாமியிடம் மனு கொடுத்து ஆலை நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ஆலைநிர்வாக தரப்பில் சிலரிடம் கேட்ட போது, கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால் கரும்பு விவசாயத்தை முழுமையாக விவசாயிகள் கைவிட்டு விட்டனர். மேலும் கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு அரசு உரிய நேரத்தில்  அரவை பணம் வழங்குவதில்லை. இதேபோல் இந்த ஆலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த 10 மாதமாக சம்பளம் வழங்கவில்லை.

மேலும் தற்போதைய நிலையில் ஆலையில் அரவை செய்ய 1200 டன் கரும்பு பதிவாகியுள்ளது. இதிலிருந்து 35 ஆயிரம் டன் கரும்பு கிடைக்கும். நாளொன்றுக்கு 1500 டன் அரவை திறன் கொண்ட ஆலைக்கு தற்போது பதிவாகியுள்ள கரும்பு மூலம் தினசரி 500 டன் மட்டும் அரவை செய்யும் அவலநிலை உள்ளது என்று கூறினர். இதுகுறித்து பணியாளர்கள், விவசாயிகள் கூறுகையில், `` இந்த ஆலை வழக்கம் போல் இந்த ஆண்டு இயங்க தேவையான நடவடிக்கைகளை மாநில சர்க்கரை துறை ஆணையம், அரசு நிர்வாகம், கூட்டுறவுதுறை அமைச்சர் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதிப்பற்றாக்குறையால் மூடும் அபாயத்தில் உள்ள அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு விவசாயிகள் நிலுவைத்தொகை, பணியாளர்கள் சம்பளப்பாக்கி 10 கோடி வரை அரசு வழங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆலையை வழக்கம் போல் இயக்க நிர்வாக ரீதியாக தேவையான நிதி உதவியை அரசு வழங்காத பட்சத்தில் இந்த ஆலை கடந்த 2005ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் மூடப்பட்டது. அதே போல தற்போது உள்ள அதிமுக அரசின் பாராமுகத்தால் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மீண்டும் மூடப்படும் அபாயக்கட்டத்தில் உள்ளதாக விவசாயிகள், பணியாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories: