விபத்தில் தம்பதி தவறவிட்ட நகை, செல்போன் திருப்பி ஒப்படைத்த கட்டிட தொழிலாளிக்கு எஸ்.பி. பரிசு

திருமங்கலம். அக். 18:திருமங்கலத்தில் நடந்த விபத்தில் தவறவிட்ட நகை மற்றும் செல்போனை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த கட்டிடத்தொழிலாளியை எஸ்பி பாராட்டி பரிசு வழங்கினார்.திருமங்கலம் செங்குளத்தை சேர்ந்தவர் சின்னசாமி (47). முன்னாள் ராணுவவீரர். நேற்று முன்தினம் மாலை இவர் மனைவியுடன் விருதுநகர் நோக்கி டூவிலரில் சென்றார். உசிலம்பட்டி சந்திப்பு நான்கு வழிச்சாலையில் சென்றபோது பின்னால் வந்த மற்றொரு வாகனம் மோதியதில் சின்னசாமியும் மனைவியும் கீழே விழுந்தனர். விபத்தில் காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சின்னச்சாமி மனைவி அணிந்திருந்த 6 பவுன் தங்கநகை மற்றும் செல்போன், மணிபர்ஸ் சம்பவ இடத்தில் கீழே விழுந்துவிட்டது. சம்பவ நடந்த சிறிது நேரத்தில் அந்த வழியாக டூவீலர் சென்ற அடையாளம் வாலிபர் ஒருவர் மணிபர்ஸ், செல்போன், நகையை கண்டவுடன் எடுத்து சென்றுள்ளார். மேலக்கோட்டை விலக்கில் நான்குவழிச்சாலையை கடக்க முயன்றபோது அந்த வாலிபர் வண்டியிலிருந்து நிலை தடுமாறி கீழே விழவே நகை, செல்போன், பர்ஸ் விழுந்தது. இதனை கவனிக்காமல் அந்த வாலிபர் எழுந்து சென்றுவிட்டார்.

அந்த வேளையில் மேலக்கோட்டை அருகேயுள்ள கிரியகவுண்டன்பட்டியைச் சேர்ந்த கட்டித்தொழிலாளி தட்சிணாமூர்த்தி ரோட்டில் கிடந்த செல்போன், நகை மற்றும் பர்சை கண்டெடுத்தார். அப்போது முன்னாள் ராணுவவீரர் சின்னசாமி தனது செல்போனிற்கு போன் செய்யவே எடுத்து பேசிய தட்சிணாமூர்த்தி செல்போன் மற்றும் நகை தன்னிடமிருப்பதாக கூறியுள்ளார். பொருள் தன்னுடையது என சின்னசாமி கூறவே பொருள்களை போலீசிடம் ஒப்படைத்துவிடுகிறேன் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என தட்சிணாமூர்த்தி கூறி அவரை திருமங்கலம் டவுன் ஸ்டேசனுக்கு வருமாறு கூறியுள்ளார். திருமங்கலம் டவுன் போலீஸ்ஸ்டேசனுக்கு சென்ற தட்சிணாமூர்த்தி நடந்த சம்பவங்களை கூறி எஸ்ஐ இளங்கோவிடம் செல்போன், 6 பவுன் நகை மற்றும் மணிபர்சை ஒப்படைத்தார். சிறிது நேரத்தில் ஸ்டேசன் வந்த சின்னசாமி பொருள்கள் தன்னுடயது என கூறி அதற்குரிய ஆவணங்களை காட்டியுள்ளார். சம்பவத்தை கேள்விபட்ட மாவட்ட எஸ்பி மணிவண்ணன் இருவரையும் மதுரைக்கு அழைத்து வர போலீசாருக்கு உத்தரவிட்டார். எஸ்பி அலுவலகத்தில் நகை, செல்போன், பர்சை எஸ்பி முன்னாள் ராணுவவீரர் சின்னசாமியிடம் ஒப்படைத்தார். தட்சிணாமூர்த்தியின் நேர்மையை பாராட்டிய எஸ்பி மணிவண்ணன் அவருக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு கொடுத்தார்.

Related Stories: