சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தோல்விக்கு காரணம் என்ன? அறிவியல் கண்டுபிடிப்பாளர் கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் பதில்

ராணிப்பேட்டை, அக்.18: ராணிப்பேட்டை அறிவியல் கண்டுபிடிப்பாளருக்கு இஸ்ரோ தலைவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். நிலவுக்கு அனுப்பிவைத்த சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தோல்விக்கு காரணம் சிலந்தியின் கால்கள் போன்று வடிவமைப்பு இல்லாததே என வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை சேர்ந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர் சு.மோகனசுகுமார், இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு இ-மெயில் மூலம் கடந்த மாதம் 23ம் தேதி கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்துடன் விக்ரம் லேண்டர் படத்தில் கால்களின் மாதிரி வரை படத்தையும் வரைந்து அனுப்பி இருந்தார். இந்நிலையில், கடிதத்தை பார்த்த இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று சு.மோகனசுகுமாருக்கு அனுப்பி இருந்த பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து கவனித்து அதைப்பற்றி எழுதி இருக்கிறீர்கள். விக்ரம் லேண்டர் பற்றிய உங்கள் ஆலோசனைக்கு எனது நன்றி. உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் அன்பாலும் ஆதரவாலும் நம் இந்திய விண்வெளித்துறை மென்மேலும் வளர்ந்து பல சாதனைகளை படைக்கும். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மோகனசுகுமார் நன்றி தெரிவித்து கடிதத்தை அனுப்பினார்.

Related Stories: