குண்டும், குழியுமாக மாறிய மேலவழுத்தூர் பகுதி சாலை வாகன ஓட்டிகள் அவதி

பாபநாசம், அக். 18: பாபநாசம் அருகே மேலவழுத்தூரில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பாபநாசம் அருகே மேலவழுத்தூரில் 20க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த ஊரில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் தினம்தோறும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மழை நாட்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், வழுத்தூரில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. நூரியாத் தெரு உள்ளிட்ட தெருக்களில் மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் தெருக்களில் நடந்து செல்லவே கஷ்டமாக உள்ளது. வயல்வெளிகளாக இருந்த பகுதி குடியிருப்புகளாக மாறியதால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீரால் பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயம் இருப்பதால் அச்சத்துடன் உள்ளோம். உள்ளாட்சி நிர்வாகம் இல்லாத காரணத்தால் யாரிடம் எங்களது குறைகளை தெரிவிப்பது என்று தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றனர்.

Related Stories: